Tuesday, March 19, 2013

புதிய தலைமுறை: உஷ்ணமாகியிருக்கும் மாணவர் போராட்டம்: பல்வேறு தரப்பினர் ஆதரவு

COURTESY: http://puthiyathalaimurai.tv/students-protest-gains-support-from-all-sections-of-society
பதிவு செய்த நாள் -மார்ச் 19, 2013  at   10:07:02 AM


லங்கை விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்தும் போராட்டம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.மாணவர் போராட்டம் ஒரு புறம் இருக்க, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போராட்டக் களம் உஷ்ணமாகியிருக்கிறது. சென்னையில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 50 மாணவர்களின் போராட்டம் இன்று 8ஆவது நாளை எட்டியுள்ளது. நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் போராட்டம் 8ஆவது நாளாக நீடிக்கிறது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் 5வது நாளாகவும், திருச்சியில் 12 மாணவர்கள் 8வது நாளாகவும் தொடர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் தொடரும் நிலையில், கோவையில் அனைத்து மாணவர்கள் சார்பில் இன்று எழுச்சிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுளளது.
 
மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை: மாணவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையே முற்றுகை போராட்டங்களும் தொடர்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரல் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தபால் நிலையத்தை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்லடம் மற்றும் துறையூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரியில் கூடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட கல்லூரி மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூரில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் தங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
 
சினிமா இயக்குனர்கள் இன்று போராட்டம்: மாணவர்கள் போராட்டம் ஒரு புறம் இருக்க, மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்ச உருவபொம்மையை மரத்தில் தூக்கிலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இலங்கை விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
 
கடல் கடந்து பெருகும் ஆதரவு: இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்துவதற்கு, ஐ.நா.வில் ஜப்பான் வலியுறுத்தக் கோரி டோக்கியோவில் வசிக்கும் தமிழர்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறையிடம் நேரில் மனு அளித்தனர்.மேலும், அதன் அலுவலகத்திற்கு அருகே அவர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம் தான் என்றும், இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்: தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் 3 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.இந்திய தூதரகம் முன்பாக இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலங்கை இனப்படுகொலை விஷயத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையை கவரவும் இந்த போராட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு லண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
சென்னை கோயம்பேட்டில் கடையடைப்பு: இலங்கையில் நடந்த போரின் போது இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சவை கண்டித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் காய், கனி, மலர் விற்பனை கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment