இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர். 300க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்ற போலீசார் நந்தன ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் காவலில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லியிலும் ஆர்ப்பாட்டம்: இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி பொங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என கோரி பேரணியும் நடத்தினர். இதில் வட மாநில மாணவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

வலுக்கும் மாணவர் போராட்டங்கள்: இலங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என்கின்றனர் மாணவர்கள்.


வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை: கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் ரயில் மறியல்: நெல்லையில் 8வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஒன்று திரண்டுள்ள மாணவர்கள்: சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இளங்கலை, முதுகலை பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ராஜபக்ச உருவப்படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் கண்டனப் பேரணி: தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஆறாவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்கத் தயங்கும் மத்திய அரசைக் கண்டித்து, அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் மதுரையில் கண்டனப் பேரணி நடைபெற்றது. மதுரையில் மன்னர் கல்லூரியில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரையில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை அகதிகள் போராட்டம் :இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, ஜெனிவா மாநாட்டில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் மேல் அருங்குனம் கிராமத்தில் பொது மக்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில், 700க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment