புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும்
புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும்
வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம்,
கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
களத்தில் நிற்கும்
கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு
மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக
ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது,
தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.
போராட்டத்தை ஃபேஸ் புக்
புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள்,
ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக
சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்குத் தேவையான
பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும்
ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.
கல்லூரி நிர்வாகத்தினர்,
காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால்
மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி,
உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக
பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.
கல்லூரி நிர்வாகமோ, மத்திய,
மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல்
ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல்,
உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி.
தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப்
பரிமாற்றம் அவசியம் வேண்டும்.
பெற்றோரின் கடின உழைப்பையும்,
காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.
கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும்.
இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது
ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.
“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள்
பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல
நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம்,
எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப்
பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு
வாழ்வது அவசியம்.
இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம்
உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள்.
ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து
ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால்
உருவாகட்டும்!
No comments:
Post a Comment