Friday, March 15, 2013

விகடன்: 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: 4வது நாளாக நீடிக்கும் போராட்டம்


சென்னை: இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும் உடல் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 34 மாணவர்களில் 5 பேர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 29 மாணவர்கள் 4வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.


சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், நெல்லை சேவியர் கல்லூரி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக்கல்லூரி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள், சிவகங்கை அழகப்பா கலைக் கல்லூரி மாணவர்கள், புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களின் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தைத் நேற்று மாலை முதல் தொடங்கியுள்ளனர்.

கோவையில் மொத்தம் 2 இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. அங்குள்ள மதிமுக அலுவலகத்தில் 18 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தினமும் ஏராளமான மாணவர்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 500 இன்று காலை முதல் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர்.

காரைக்குடியில் உண்ணாவிரதம் இருந்த அழகப்பா அரசுக் கலை கல்லூரி மாணவர் விக்னேஷ்வரன் உடல் நிலை மோசம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
அரியலூரில் ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கொடும்பாவியை எரித்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.

மதுரை தல்லாக்குளத்தில் தபால் தந்தி அலுவலகம் மாடியில் ஏறிய சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து இருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment